சென்னை அம்பத்தூர் சரகத்திற்குட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராக பரணிகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். அவருடன் துணை காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோரும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக கரோனா பரவலை தடுக்கும் களப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆய்வாளர் பரணிகுமார், துணை காவல் ஆய்வாளர் முத்துராஜ், அணிருதீன், ஏட்டுகள் ஐயப்பன், சந்திரசேகர் ஆகியோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டனர்.
பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆய்வாளர் பரணிகுமார், துணை காவல் ஆய்வாளர் முத்துராஜ் ஆகியோர் அம்பத்தூர், திருமுல்லைவாயலில் உள்ள வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், எஸ்.ஐ அணிருதீன், ஏட்டுகள் சந்திரசேகரன், அய்யப்பன் ஆகியோர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரே காவல் நிலையத்தில் ஐந்து பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது சக காவலர்கள் மத்தியில் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தினமும் சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.