கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அறிவித்து, வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஊரடங்கை அமல்படுத்த சென்னை மாநகராட்சியின் சார்பில் காவல் துறையினருடன் இணைந்து 30 ஊரடங்கு அமலாக்கக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மார்ச் 17ஆம் தேதி வரை அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாத 382 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத தனி நபர்கள், கடை உரிமையாளர்களிடமிருந்து இதுவரை 1 கோடியே 62 லட்சத்து 87ஆயிரத்து 281 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை 15 ஆயிரத்து 137 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 8 லட்சத்து 41ஆயிரத்து 806 நபர்கள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 24ஆயிரத்து 745 நபர்களுக்கு (RTPCR) ஆர்டிபிசிஆர் பரிசோதைனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ந்து மண்டல கள அலுவலர்களால் கண்காணிக்கப்பட வேண்டும். மே 17 ஆம் தேதியன்று ஒருநாள் மட்டும் 19 ஆயிரத்து 205 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல் மே 17ஆம் தேதியன்று ஒருநாள் மட்டும் 208 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 19ஆயிரத்து 580 நபர்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பாகவும், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர், வணிக வரித்துறை முதன்மை செயலாளர் எம்.ஏ. சித்திக் தலைமையில் மண்டல கள ஒருங்கிணைப்பு குழு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக, நேற்று (மே.18) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.