சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தொலைத்தொடர்பு மையம், கட்டுப்பாட்டு அறை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த அறையை பற்றிய விவரங்களை கீழே காணலாம்.
இரண்டாவது அலை
தமிழ்நாட்டில் கரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம் முதலிய மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவிவருகிறது.
தீவிர பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தல் உள்ளிட்ட செயல்களில் மாநகராட்சி தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. சென்ற ஆண்டு கரோனா அதிகமாக இருந்த காலத்தில் வீடு வீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதிகளவில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பின்னர் ஜனவரி மாதம் நோய்த்தொற்று குறைந்தவுடன் பல்வேறு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
கட்டுப்பாட்டு அறை
தற்போது நோய்த்தொற்று அதிகரித்துள்ளதால் மீண்டும் அனைத்துப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒரு பணி அம்மா மாளிகையில் இயங்கும் கரோனா கட்டுப்பாட்டு அறை. இந்த அறைக்குத் தொடர்புகொண்டு கரோனா குறித்த அனைத்துச் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
இந்த அறையில் கிட்டத்தட்ட நூறு இணைப்புகள் உள்ளன. இரண்டு கட்டுப்பாட்டு அறை எண்கள் உள்ளன. அவை 044-46122300, 044-25384520. இந்த அறை 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருக்கும். இதற்காக 120 முதல் 150 நபர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிவர்.
கடந்த ஆண்டு சுமார் நான்கு லட்சம் பேர் இந்த அறைக்குத் தொடர்புகொண்டனர். மேலும் ஆறு மருத்துவ அலுவலர்கள், ஐம்பது சமூகநல பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர்.
கரோனா கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்துள்ள முன்களப் பணியாளர்கள் யார், யார் பயன்பெறுவர்கரோனா தடுப்பூசி, அவசர மருத்துவ உதவி, கரோனா தொற்று நோய், இதர மருத்துவ நோய்கள், கரோனா தொற்று பரிசோதனை, மருத்துவமனைகள், கோவிட் பாதுகாப்பு மையங்கள், சென்னை மாநகராட்சியின் VIDMED காணொலி மருத்துவ சிகிச்சை, கரோனா தொற்று பாதித்த நபர்களுக்கான மருந்துகள், தொற்று உள்ள பகுதிகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், வீடுகளில் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான தகவல்கள், மனநல ஆலோசனைகள் ஆகியவை இந்த மையத்தின் வாயிலாக வழங்கப்படும்.
மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்கப்படும்.
கரோனா கட்டுப்பாட்டு அறையில் முன்களப் பணியாளர்களிடம் ஆலோசிக்கும் ஆணையர் பிரகாஷ் ஆணையர் பிரகாஷ் பேசியது,மாநகராட்சி தொடர்ந்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. மேலும் கரோனா குறித்த வேறு எந்தவித சந்தேகளுக்கும் கரோனா கட்டுப்பாட்டு அறையை அழைக்கலாம்.
இரவு நேரங்களில் உடல்நிலை சரி இல்லாவிட்டால், கட்டுப்பாட்டு அறையை அழைத்தால் மாநகராட்சி ஊழியர்கள் வருவார்கள். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு எந்தத் தேவை இருந்தாலும் தொடர்புகொண்டு கேட்கலாம். மேலும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.
இந்த அறைக்கு வரும் அனைத்து அழைப்புகளும் சேகரிக்கப்படும். மேலும் அங்கு பணிபுரியும் அனைத்து நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும். கடந்து ஆண்டு இ-பாஸ் போன்ற பல்வேறு வழிகளில் இந்தக் கட்டுப்பாட்டு அறை பெரும் உதவியாக இருந்தது. தற்போது அது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது மீண்டும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.