தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் இன்று புதிதாக 4,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 382 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 4,824 நபர்களுக்கும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 38 நபர்களுக்கும் என மொத்தம் 4,862 நபர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 5 கோடியே 70 லட்சத்து 33ஆயிரத்து 924 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 688 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 7 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகளும் என 9 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 814 ஆக உயர்ந்துள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பு
வெளிநாடுகளிலிருந்து வந்த 25 ஆயிரத்து 122 பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 350 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 240 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கான எஸ் ஜுன் டிராப் கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வந்த நோயாளிகளில் 57 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 64 நபர்களுக்கும் என 121 நபர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் 2,481 பேருக்குப் பாதிப்பு
சென்னையில் புதிததாக 2,481 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7,878ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் செங்கல்பட்டில் புதிதாக 596 நபர்களுக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,711ஆக அதிகரித்துள்ளது. மேலும் கோயம்புத்தூரில் 259 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 70,135 படுக்கைகள் காலியாக உள்ளன. அவற்றில் ஆக்சிஜன் படுக்கைகளும் தீவிர சிகிச்சைக்கு ஐசியூ படுக்கைகளும் அடங்கும்.
கோவிட் தனிமைப்படுத்தும் மையங்களில் 42ஆயிரம் படுக்கைகளும் காலியாக உள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு ஊரடங்கு