சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. தொற்றை மேலும் குறைக்க அந்தந்த மண்டலங்களில் கூடுதல் மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் தினமும் சராசரியாக 30 ஆயிரம் நபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று (மே 28) மட்டும் சென்னையில் 30 ஆயிரத்து 474 நபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், 2 ஆயிரத்து 762 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னையில் கரோனா பரவல் விகிதம் 9.1 விழுக்காடு குறைந்துள்ளது.
மேலும், சென்னையில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று (மே 28) மட்டும் 35 ஆயிரத்து 28 நபர்களுக்குக் கரோனா தடுப்புசி செலுத்தப்பட்டுள்ளது.
இதில், 18 முதல் 44 வயதுக்குட்பட்டோர் 24 ஆயிரத்து 670 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டோர் 10 ஆயிரத்து 358 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முதலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அச்சமடைந்த மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன்வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல் மாநகராட்சி நிர்வாகமும் அதிக தடுப்பூசி முகாம்களை நடத்துவது, மாற்றுத்திறனாகளுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது