சென்னை: சென்னையில் நடக்கக்கூடிய குற்றங்கள், பிரச்சனைகள் உடனடியாக போலீசாருக்கு தெரியவந்து நடவடிக்கை எடுப்பதற்காக சென்னை காவல்துறை ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை சென்னை காவல்துறை ஐடியை, டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். அதற்கு உடனடியாக சென்னை காவல்துறை பிரச்சனைக்கான தீர்வுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ட்விட்டரில் அபுபக்கர் என்பவர் மாட்டுக்கறி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதற்கு சென்னை காவல்துறை இத்தகைய பதிவு தேவையற்றது என பதிலளித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவது குற்றமில்லை எனவும் சென்னை காவல்துறையை சம்பந்தப்பட்டவரை டேக் செய்யாமலே தன்னிச்சையாக பதிலளித்திருப்பது கண்டனத்துக்குரியது என பொதுமக்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, இது தவறுதலாக நடந்துவிட்டதாகவும், உடனடியாக முழு விளக்கத்தை தருவதாகவும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவித்திருந்தது. மேலும், உடனடியாக சென்னை காவல்துறை அந்த பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கியது.
அதைத் தொடர்ந்து சென்னை காவல் துறை , "தாங்கள்பதிவிட்ட ட்வீட் சென்னை காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்விட் செய்யப்பட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த (முந்தைய) பதிவு செய்யப்பட்டது.
ஆனால், தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல" என விளக்கம் அளித்து ட்வீட் செய்துள்ளது. மாட்டுக்கறி தொடர்பான சென்னை காவல்துறை பதிவு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வால் தமிழ் பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்கள் - டிஜிபி சைலேந்திரபாபு வேதனை