சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், அரசு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளுக்கான ஒதுக்கீடுகள், ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அரசு ஒப்பந்த அடிப்படையில் நான்கு மண்டலங்கள் தவிர, மற்ற மண்டலங்களில் பணியாற்றி வந்த அனைவரும் கடந்த 2021 ஜனவரி மாதம் 10ஆம் தேதி எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்னர்.
எனவே, மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு, 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் போராடிய பெண் தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறை மனிதாபிமானமின்றி, காலால் எட்டி உதைத்து அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும்; அதில் நாகம்மாள், அஞ்சலி, முருகம்மாள், ரத்தினம் ஆகிய மண்டலம் 14-ஐ சேர்ந்த பெண் துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தின்போது காவல் துறை தாக்கியதில் பாதிக்கப்பட்டு, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கலைச்செல்வி, தேவி பேசியதாவது
"கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் 2021 ஜனவரி 11ஆம் தேதி முதல் 15 மண்டலங்களிலும் 12,500 ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.
கடந்த 5 மாதங்களாக 30-க்கும் மேற்பட்ட மனுக்களை மாநகராட்சியில் கொடுத்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தனை ஆண்டுகள் பணியாற்றியும் எங்களுக்கு எந்த ஒரு பலனும் கொடுக்கப்பட வில்லை.
கரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு பணி கொடுக்க வேண்டும் என்பதே கோரிக்கை.
ஆனால், அதை கூட காதுகொடுத்து கேட்கவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை ஆண் காவலர்கள் காலால் எட்டி உதைத்து சித்ரவதை செய்கின்றனர்" என கூட்டாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குறுகிய காலத்தில் பதவி - அண்ணாமலை கடந்து வந்த பாதை!