தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கியது. ஆரம்பத்தில் நோயின் தாக்கமும், நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால் ஏற்கனவே பணியிலிருந்த செவிலியர்களைக் கொண்டு வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.
குறிப்பாக சென்னையில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில், மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கிய அரசு, அதற்கான மருத்துவர்களையும், செவிலியர்களையும் பணியில் அமர்த்தியது. மருத்துவர்களைப் பொறுத்த வரை ஏற்கனவே எம்பிபிஎஸ் முடித்து விட்டு முதுநிலை மருத்துவம் படித்த மாணவர்கள் உடனடியாக பணியில் அமர்த்தப்பட்டனர்.
2019ஆம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தகுதி பெற்ற செவிலியர்களைப் பணியில் அமர்த்தினர். உயிர்க்கொல்லி நோயான கரோனா வைரஸ் நோயுடன் பல்வேறு சிரமங்களை அனுபவித்து செவிலியர்கள் பணி புரிந்துள்ளனர். அரசுப் பணிக்குச் சென்றால் எப்படியாவது தங்களுக்குப் பணி நிரந்தரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் குடும்பம், குழந்தைகளை பிரிந்து மருத்துவமனையில் தங்கி செவிலியர்கள் பணி புரிந்தனர். பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் பலருக்கு வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று, பின்னர் தொடர்ந்து மீண்டும் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தற்போது கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துவருவதால், செவிலியர்களுக்கான பணிகளும் தற்போது முடிவடைந்து வருகிறது. இவர்களை தொடர்ந்து பணிபுரிய அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டுச் சங்கத்தின் மாநில நிர்வாகி அஸ்வினி ஜெபபிரியா கூறுகையில், 'மருத்துவ பணியாளர் தேர்வில் தகுதி பெற்ற சுமார் 4 ஆயிரம் செவிலியர்கள் கரோனா பணிக்காக ஆறு மாதத்திற்கு அரசுப் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆறு மாதம் முடிவடைய உள்ள சூழ்நிலையில் இவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்றுப் பணி நீட்டிப்பு வழங்கி உள்ளனர்.
கரோனா காலத்தில் குடும்பம், குழந்தைகளை மறந்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து மருத்துவமனையிலேயே தங்கி பணிபுரிந்த இந்த செவிலியர்களுக்கு அரசு காலி பணியிடங்களில் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தற்போது தொடங்கப்படவுள்ள சிகிச்சை மையத்திற்கு(மினி கிளினி) இந்த செவிலியர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2015ஆம் ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட செவிலியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 7 ஆயிரம் பேரில் 2,000 பேருக்கு மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. மிதமுள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே 2015ஆம் ஆண்டு தேர்வு எழுதி வந்த அனைத்து செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதேபோல் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வினை எழுதி கரோனா சிகிச்சை வழங்குவதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு அரசுப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' இவ்வாறு தெரிவித்தார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று உடன், குழந்தைகளும் மறந்தும் போராடிய செவிலியர்கள் மீண்டும் தங்களின் வேலைக்காக அரசாங்கத்திடம் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவலத்தைத் தீர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.