சென்னை : உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத உள்துறை கூடுதல் தலைமை செயலர் பிரபாகர் மற்றும் காவல்துறை மற்றும் சீர்திருத்த சேவை தலைவர் சுனில் குமார் சிங் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், 4 வாரத்திற்குள் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் காலியாக உள்ள 24 கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் 12 சிறைத்துறை சமூக ஆர்வலர் பணியினை நிரப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இதனைச் செயல்படுத்தாத உள்துறை கூடுதல் தலைமை செயலர் பிரபாகர் மற்றும் காவல்துறை மற்றும் சீர்திருத்த சேவை தலைவர் சுனில் குமார் சிங் ஆகியோர் மீது மதுரையை சேர்ந்த கே.ஆர்.ராஜா நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 6 நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தற்போது சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 2 சிறைத்துறை சமூக ஆர்வலர் காலி பணியிடங்களில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், 24 கூடுதல் கண்காணிப்பாளர் காலி பணியிடங்களில் வெறும் 6 நபர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனரா? எனக் கேள்வி எழுப்பி வழக்கு குறித்து நான்கு வாரத்திற்குள் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் - புதுச்சேரி முதலமைச்சர்..!