மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, ஆயிரம் ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவெடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. கொலை வழக்குகளில் ஆயுள் கைதிகளாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்திவேல் உள்ளிட்ட ஐந்து பேரை, தமிழ்நாடு அரசாணையின்படி விடுவிக்கக் கோரி, அவர்களின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, ஆயுள் கைதிகளின் பெற்றோர் காளியம்மாள், ஆசியா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி, கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார், கோவை சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த வழக்குகள் முன்பு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் எனப் பல முறை அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 21ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐந்து பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அந்த வழக்குகள் 25ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போதும், விசாரணையை தள்ளி வைக்கும்படி அரசுத்தரப்பில் கோரப்பட்டதை அடுத்து, உள்துறைச்செயலர் நிரஞ்சன் மார்டி, கூடுதல் டி.ஜி.பி., ஆபாஷ்குமார், கோவை சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
மேலும் நேரில் ஆஜராகாமல் இருக்க உச்ச நீதிமன்றத்தை அணுகி தகுந்த உத்தரவை பெற்றுக் கொள்ளலாம் எனவும், இல்லாவிட்டால் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!