தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த வைரஸ் பரவலைத் தடுக்க மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை இணைந்து முகக்கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இந்தப் பரவலைக் கட்டுப்படுத்த, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துவருகிறது.
சென்னையில் நேற்றுவரை 158ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது 274ஆக அதிகரித்துள்ளது. இந்த 274 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய தன்னார்வலர் குழுவை மாநகராட்சி அமைத்துள்ளது.
இந்தநிலையில் மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
தண்டையார்பேட்டை - 50
திரு.வி.க. நகர் - 7
அம்பத்தூர் - 13
அண்ணாநகர் - 43
தேனாம்பேட்டை - 8
கோடம்பாக்கம் - 124
வளசரவாக்கம் - 13
ஆலந்தூர் - 5
அடையாறு - 9
சோளிங்கநல்லூர் - 2
இப்பகுதிகளில் தொடர்ந்து 14 நாள்கள் யாருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து விடுவிக்கப்படும்.