சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியன் என்பவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது அலுவலகத்தில் மட்டும் 89 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்த சோதனையில், ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் ரொக்கமும் மூன்று கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாது 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்களும் ஒரு நான்கு சக்கர வாகனமும் மற்றும் 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுற்றுச்சூழல் துறையில் இருபது வருடங்களாக பணிபுரிந்துவரும் பாண்டியன், தற்போது தமிழக கடலோரப் பகுதிகளில், வனப்பகுதிகளில் நடைபெறும் கட்டுமானம், தொழிற்சாலைகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்குவதில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாகத் தெரியவந்துள்ளது. இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி அளிப்பதில் பல இந்திய வனத்துறை அலுவலர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் ஆறு துணை நடிகைகளுடன் அந்தமானில் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாண்டியன் முன்னாள் மத்திய திமுக அமைச்சரின் பினாமியாக செயல்படுவதாகவும் பலமுறை இவர் மீது லஞ்ச புகார்கள் அளிக்கப்பட்டிருப்பினும், அவருக்கு ஆதரவாக மாசுக்கட்டுப்பாட்டு உயர் அலுவலர் செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
காவல் துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் அலுவலர் ஒருவரின் மனைவி, சுற்றுச்சூழல் துறையில் உயர் பொறுப்பில் இருப்பதாகவும், பாண்டியனுக்கு உடந்தையாக இருக்குமாறு அவர் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும், அந்தமானில் நடிகைகளோடு வனத்துறை அலுவலர்களை அழைத்துச் சென்ற விவகாரத்தில் ஆத்திரமடைந்த ஒரு வனத்துறை அலுவர் பாண்டியன் குறித்து புகாரளித்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினரின் பிடியில் சிக்கியுள்ள பாண்டியன், லஞ்ச விவகாரத்தில் தரகர் போன்று செயல்பட்டுள்ளதால்,தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் பல அலுவலர்கள் சிக்குவர்கள் என தெரிகிறது.
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் ரூ.1.37 கோடி, 3 கிலோ நகைகள் பறிமுதல்!