சென்னை எழிலகத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு வளாகத்தில் “அறுவடைக்கு பிந்தைய மற்றும் விநியோக தொடர் மேலாண்மை” குறித்த காணொலி வாயிலான கருத்தாய்வுக் கூட்டம், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி.பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம் ஐஏஎஸ், குழுமத் தலைவர் (வேளாண்மை, கொள்கை மற்றும் திட்டம்) சீ.சுபாஷ் சந்திரபோஸ், துறைசார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கின் பரிந்துரைகள் அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை கணிசமாக குறைத்து, விவசாயிகளுக்கும், வேளாண் வணிக நிறுவனங்களுக்கும் தங்களது முதலீடுகளில் சிறந்த வருவாயைப் பெறவும், நுகர்வோர் பயன்பெறவும் உதவும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், இக்கருத்தரங்கில், வேளாண்மைத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றின் துறைசார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று பேசினர்.
வேளாண் பண்ணைகள், கால்நடைகள் மற்றும் கடற்சார் உற்பத்திகளில், அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைப்பது மற்றும் விநியோக தொடர் மேலாண்மை குறித்த மிகச் சிறந்த வழிகளைக் கண்டறிவதே இந்த கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது.