நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை பேரவையில் நிராகரிக்கப்பட்டதையடுத்து, அக்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஆர். ராமசாமி, நீட் தேர்வு பற்றி சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்பாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். அது சம்பந்தமாக தற்போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு பல வாதத்தை அவர்கள் முன் வைத்தார்கள். அவர்களால் சரியான பதில் சொல்ல முடியவில்லை.
எல்லா தவறையும் காங்கிரஸ்தான் செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் அபாண்டமாக குற்றம்சாட்டினார். இது குறித்த நடவடிக்கை என்ன என்பதைப் பற்றி கூறாமல் 20, 30 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் செய்ததை பேசி வருகின்றனர். நாங்கள் முயற்சி செய்தோம், ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை என்று முதலமைச்சர் கூறினார். அதை நடத்திக்காட்ட வேண்டியது அவருடைய பொறுப்பு.
காங்கிரஸ் நாடகம் ஆடுகிறது என்கிறார்கள். பாஜகவும், அதிமுகவும்தான் இரட்டை வேடம் போடுகிறார்கள். இந்த விவகாரத்தைக் கண்டித்து ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்தினோம். ஆனால் இதை சட்ட வல்லுநர்களுடன் பேசிதான் முடிவு செய்ய முடியும் என்று - இதற்கு தீர்வு காண்பதற்கு பதிலாக தட்டிக் கழிக்கின்றனர். அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று கூறினார்.