அரும்பாக்கத்தில் நடைபாதையில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மதுரவாயல் காவல் உதவி ஆணையர் ஜெயராமன் முன்னிலையில் கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது, ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடைகளை அப்புறப்படுத்த கூடாது என காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் வாக்கு வாதம் செய்ததால், உதவி ஆணையர் ஜெயராமன் அவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கோயம்பேடு காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை சந்தித்த உயர் அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் தானாக வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் காவல் இணை ஆணையர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.