சென்னை: தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் ஆளும் கட்சியான திமுக கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை விறுவிறுப்பாக நடத்திவருகிறது.
இந்த நிலையில் கேரள காங்கிரஸ் மூத்தத் தலைவர் ரமேஷ் சென்னிதலா இன்று மாலை தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்தார். அவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, உடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த ரமேஷ் சென்னிதலா, “தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்காக மேற்பார்வையாளராக வந்துள்ளேன். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சிகளில் போட்டியிட உள்ளவர்களின் விவரங்களைத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் செய்துவருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளை ஆய்வுசெய்ய என்னை சோனியா காந்தி அனுப்பியுள்ளார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களைப் பிடிக்கும்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெறும்" எனக் கூறினார்.
மேலும் முதலமைச்சரைச் சந்திப்பது குறித்த கேள்விக்கு, ‘இங்கு எங்களது கட்சிக்கு உதவிசெய்ய வந்துள்ளேன், கட்சி என்ன கூறுகிறதோ அதன்படி முடிவு எடுக்கப்படும்’ என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: வார்டு பங்கீட்டில் முரண்பாடு: ஜோதிமணி வெளியேறியது குறித்து செந்தில்பாலாஜி விளக்கம்