உள்ளாட்சித் தேர்தலில் இடங்களை ஒதுக்காமல் திமுக கூட்டணி தர்மத்திற்குப் புறம்பாக செயல்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டார். நாளை ஒன்றியத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிக்கையானது திமுக கூட்டணிக் கட்சியினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரத்திடம் இது குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், உரிய இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்காததது வருத்தம் அளிப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மறைமுக தேர்தலுக்கு இன்னும் ஒரு இரவு அவகாசம் இருப்பதால் காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி என்பதை உணர்ந்து, திமுக காங்கிரஸுக்கு உரிய இடங்களை கொடுக்க வேண்டும். வருகின்ற 2021ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அவற்றைக் கருத்தில்கொண்டு திமுக செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், “காஷ்மீர் மாநிலத்தில் உரிமை மீறல் கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரையும் நடந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் ஆளுநராக இருந்த, தற்போது கோவாவின் ஆளுநராக மாற்றப்பட்டுள்ள சத்தியபால் மாலிக் காஷ்மீர் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான ஒரு கேள்விக்குக்கூட பாஜக இதுவரை பதில் சொல்ல தயாராக இல்லை. பாகிஸ்தானிலிருந்து வரும் இந்துக்களை அனுமதிக்கும்போது, நம் தொப்புள்குடி உறவுகளான தமிழர்களை அனுமதிக்காதது ஏன்?” என்றார்.
இதையும் படிங்க: நாளை உள்ளாட்சிக்கான மறைமுகத் தேர்தல் - தயாராகும் மதுரை!