சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருக்கும் கேபிகே ஜெயக்குமார் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 8 வட்டார தலைவர்களை காரணம் இன்றி பதவி நீக்கம் செய்து, அவருக்கு சாதகமான புதிய நிர்வாகிகளை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நேற்று (நவ. 15) மாலை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இதே வேளையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், செயல் தலைவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டமும் திட்டமிடப்பட்டு நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்க நேற்று மாலை 4:30 மணியளவில் சத்தியமூர்த்தி பவன் வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ் அழகிரியை வழிமறித்து தொண்டர்கள் முழக்கமிட்டனர். அப்போதே ஆத்திரமடைந்த கேஎஸ் அழகிரி, இரண்டு காங்கிரஸ் நிர்வாகிகளை கன்னத்தில் அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வந்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னணி தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் மற்றும் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டூர் உள்ளிட்டோர் சத்தியமூர்த்தி பவன் உள்ளே வரும்போதும் போராட்டக்காரர்கள் மாவட்ட தலைவருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் கேபிகே ஜெயக்குமாரை மாற்றம் செய்ய வேண்டும் என கேஎஸ் அழகிரியிடம் மனுவும் அளிக்கப்பட்டது. அத்தோடு போராட்டம் நடத்துவர்களிடம் தலைவர் கேஎஸ் அழகிரி மற்றும் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்திய நிலையில், ஆலோசனைக் கூட்டம் முடியும் தருவாயில் கேஎஸ் அழகிரி புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் திடீரென சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்கள் மற்றும் சிலரிடையே கைகலப்பு ஏற்பட்டு அருகில் இருந்த பைப் மற்றும் கற்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தி அது அடிதடியாக மாறி கலவரமானது. இந்த திடீர் கலவரத்தில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளான ராபர்ட் ஜோஸ்வா மற்றும் டேனியல் ஆகிய மூன்று நிர்வாகிகளுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.
முற்றுகைப் போராட்டமாக நடைபெற்று வந்த போராட்டம் கைகலப்பு ஏற்பட்டு கலவரத்தில் முடிந்த நிலையில் திருவல்லிக்கேணி துணை ஆணையர் பாஸ்கரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு, உடனடியாக அனைத்து போராட்டக்காளர்களும் சத்தியமூர்த்தி பவனிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: “ஈபிஎஸ் செயல்திறன் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயார்” - ஜெயக்குமார்