சென்னை: (Congress against BJP)மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையை விவரிக்கும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் சென்னை எழும்பூர் ஆதித்தனார் சிலை அருகில் தொடங்கி புதுபேட்டை மார்கெட் வரை நடைபெற்றது.
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முக்கிய காங்கிரஸ் பொறுப்பாளர்கள்
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கீழனூர் ராஜேந்திரன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் விக்டரி மோகன், சர்க்கிள் தலைவர்கள் சிவாலயா ஜாபர்,ரியாஸ், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பா.ஜ.க அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி நடைபயனமாக வந்தனர்.
துண்டு பிரசுரம் விநியோகம்
பிரச்சாரப் பயணத்தின் போது,சாலையின் ஓரமாக அமைந்துள்ள கடைகள், பொதுமக்களுக்கு, மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளான, சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை காங்கிரஸ் தொண்டர்கள் வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீ வல்ல பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு
அப்போது அவர் பேசுகையில் "மத்திய பாஜக அரசின் தவறான கொள்கையால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பாஜக அரசு பதவியேற்ற பொழுது இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் நாட்டில் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், உழைப்பாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரான அவர்களின் வாழ்வாதாரத்தை அளிக்கக்கூடிய அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசாக பா ஜ க அரசு உள்ளது என கூறினார்.
பாஜக அரசு இதுவரை அவர்கள் அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்க கூடிய செயல்களிலேயே ஈடுபட்டு வருகின்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து போராடுவோம்.
சிறுபான்மை மக்கள் மீது அவதூறு
கிறிஸ்தவ மக்கள் வேற்று மதத்தினர் தங்கள் மதத்தில் மதமாற்றம் செய்து வருகின்றனர் என ஆர்எஸ்எஸ் பாஜக சொல்வது கிறிஸ்தவர்கள் மீது தவறான கருத்துக்களை பரப்பும் செயலாகும். கிறிஸ்தவர்கள் இன்றுவரை சிறுபான்மையினர் ஆகவே இருந்து வருகின்றனர். அவர்கள் மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். சிறுபான்மை மக்களின் மீது தவறான கருத்துக்களை பரப்புவதற்காகவே பாஜக ஆர்எஸ்எஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் அமைச்சர் ஆருத்ரா தரிசனம்