சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொகுப்பூதியத்தில் கணினி உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து வழங்கிட நேரம் வழங்க வேண்டும் என முதலமைச்சரின் தனிச் செயலாளரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், தங்களை பணி நிரந்தரம் செய்திடக்கோரி கடந்த ஒன்றாம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறோம். கணினி உதவியாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும். 906 கணினி உதவியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்பு தகுதி தேர்வு நடத்தி இளநிலை உதவியாளர்களாக ஈர்த்துக் கொள்வதற்கு ஊரக வளர்ச்சித் துறை, கடந்த 2017 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
ஆனால் இது நாள் வரை கணினி உதவியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனை கண்டித்து கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பனகல் மாளிகையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம்.
அதனைத் தொடர்ந்து துறை செயலாளர் அமுதாவின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டத்தை திரும்ப பெற்று பணிக்கு திரும்பினோம். இந்நிலையில் தற்போது வரை கணினி உதவியாளர்கள் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் கடந்த ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை கணினி உதவியாளர்கள் சங்கத்தின் சார்பாக பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி தொடர் விடுப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.
எனவே கணினி உதவியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றி தர வேண்டும். தங்களது கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து வழங்க நேரம் ஒதுக்கிட வேண்டும் என மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: போலி வங்கி நடத்தி ரூ.2 கோடி மோசடி - போலீஸ் அதிரடி நடவடிக்கை