'இந்தியன் 2' படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்க தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்திற்கு இயக்குநர் ஷங்கர் ஒப்பந்தம் செய்துள்ளார். வரும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான ஐந்து மாதங்களில் 'இந்தியன் 2' படத்தை முடித்து கொடுத்து விடுவார்.
தயாரிப்பு நிறுவனம் சங்கருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாகவும், அவற்றை திரும்பப் பெற வேண்டும். நடிகர் விவேக் இறந்து விட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளதாகவும் ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவரங்களை மறைத்து லைக்கா நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.
லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இயக்குநர் ஷங்கருக்கு ஏற்கனவே 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீத தொகையை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பழைய விஷயங்களை மறந்து எதிர்காலத்தை கருத்தில் கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து, இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: ஷங்கர் படங்களை இயக்க தடைவிதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்