சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளரைச் சந்தித்த மருதுசேனை சங்கத்தின் தலைவர் கரு.ஆதி நாராயணன், என்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர்கள் பேசியதாவது," தமிழ்நாட்டின் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கோயம்பேடு அருகே அரசிற்குச் சொந்தமான சுமார் 10.5 ஏக்கர் (ரூ.1,575 கோடி) நிலத்தைத் தனியாருக்கு வியாபார நோக்கிற்கு குறுகிய கால இடைவெளியில் எந்தவித சட்ட திட்டங்களையும் பின்பற்றாமல் விற்றுள்ளார்.
முன்னதாக, அந்த அரசு நிலத்தை அரசு பள்ளி அல்லது பொது மக்கள் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தலாமே தவிர, யாருக்கும் கொடுக்கக்கூடாது என தெரிவித்த அமைச்சர், குறுகிய கால அளவில் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய (ரூ.1,575 கோடி) அளவில் ஊழல் நடந்துள்ளது.
அதுமட்டுமல்லாது, கரோனா காலத்தில் அணியக்கூடிய முகக்கவசத்தில் ஊழல், சுகாதாரத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. அரசு நிலத்தை மோசடி செய்த அமைச்சர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளோம் என்றனர்.