சென்னை: தமிழ்நாட்டில் மதக்கலவரம் செய்யத் திட்டமிடும் பாஜக மூத்தத்தலைவர் சுப்பிரமணிய சுவாமியை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் சமூகநல செயல்பாட்டாளர்களின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமூக செயற்பாட்டாளர் முகமது கவுஸ், 'பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின்மீது, தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை குறித்துப்பேசிய சுப்பிரமணிய சுவாமி, என்னால் முடிந்தால் தமிழ்நாட்டு அரசை கவிழ்க்க முடியும் என்று சவால் விட்டிருக்கிறார்.
அபாண்டமான குற்றச்சாட்டு
அதேபோல் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளிக்கும் போது, தமிழ்நாட்டில் தீவிரவாதம் அதிகரித்து விட்டதாகவும், குறிப்பாக தென் மாவட்டத்தில் தீவிரவாதம் அதிகரித்து விட்டதாகவும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான இந்து கோயில்களை இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்கள் இடித்துள்ளார்கள் என்ற ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை இஸ்லாமிய மக்கள் மீது சுமத்தி இருக்கிறார்.
உண்மையில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததா என்ற மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில், கடந்த 75 ஆண்டுகளில் இது போன்ற ஒரு குற்றங்கள் நடந்ததாக எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
உரிய ஆவணம் இல்லை
இந்தியாவில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த ஒரு கோயில்களிலும் இஸ்லாமியர்கள் இடித்ததாகவோ, அதன் மூலம் கலவரங்களை உண்டு பண்ணியதாகவோ காவல்துறை எந்த ஒரு ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை.
காவல் துறையால் வழக்குப் பதிவு செய்யப்படாத ஒரு குற்றச்சாட்டை சுப்பிரமணியசாமி சொல்வதில், தமிழ்நாட்டில் ஒரு சாதிய, மதக்கலவரத்தைத் தூண்டுவதுபோல் உள்ளது.
ஆகவே, பாஜக மூத்தத்தலைவர் சுப்பிரமணியசுவாமி மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், வழக்கு தொடுத்து, அவரை கைது செய்ய வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை