சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் பல்வேறு தவறான தகவல்களை சவுக்கு சங்கர் இணையதளத்தில் பரப்பியதாகவும் அதற்கு உடந்தையாக விஸ்வநாதன் இருந்ததாகவும் குற்றஞ்சாட்டிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான பசும்பொன் பாண்டியன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை திசை திருப்பும் நோக்கில் சவுக்கு சங்கர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசி வருவதாகவும், குறிப்பாக மாணவியின் தனிப்பட்ட தரவுகளை சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டு வரும் சவுக்கு சங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார். சவுக்கு சங்கருக்கு இந்த வழக்கில் பல தகவல்களை டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன் மறைமுகமாக தந்தார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோல தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவரான ஏ.கே. விஸ்வநாதனும், சவுக்கு சங்கரும் காவலர் வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றும் குமரேசன் என்பவரை மிரட்டி, பின்னர் மூன்று பேரும் இணைந்து பல ஊழல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
குறிப்பாக ஏ.கே. விஸ்வநாதனின் உறவினரான ஒப்பந்ததாரர் நாராயணன் என்பவருக்கு கடந்த 1 ஆண்டில் மட்டும் 30 கோடி ரூபாய் வரை டெண்டர் ஒதுக்கி முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாகவும், இதற்கு உறுதுணையாக செயல்பட பொறியாளர் குமரேசனை சவுக்கு சங்கர் வற்புறுத்திதாகவும் குற்றம்சாட்டிய அவர், இவ்வாறு செயல்பட்டு, 3 கோடி ரூபாய் வரை கமிஷன் பெற்றதாக அவர் கூறினார்.
குமரேசன் மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் தற்போது வாரியத்தின் தலைவர் ஏ.கே. விஸ்வநாதன் மற்றும் அவரது நண்பர் சவுக்கு சங்கருடன் குமரேசன் இணைந்து மூன்று பேரும் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதும் அது தொடர்பாக பெறப்பட்ட லஞ்சப் பணத்தில் பல்வேறு சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகும் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கரிடம், தொடர்ந்து டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன் பேசக்காரணம் என்ன என அவர் கேள்வி எழுப்பினார். இவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை தகுந்த ஆதாரத்துடன் சமர்ப்பித்துள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.