சென்னை சிட்லப்பாக்கம், ஜோதி நகர் பகுதியில் வசிப்பவர் ரவிக்குமார். இவருடன் பிறந்தவர்கள் குமாரி, பன்னீர் செல்வம் மற்றும் விஜய் நிர்மலா ஆகிய மூன்று பேர் இருக்கின்றனர். இவர்களது தந்தையான கிருஷ்ணன் கடந்த 2003ஆம் ஆண்டும், சகோதரி குமாரி 2007ஆம் ஆண்டும் காலமான நிலையில், மீதமுள்ள சகோதரியும் அவர்களது வாரிசுகளும் தனது அண்ணன் பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து சொத்தின் பங்கை தனக்கு தராமல் தன்னை ஏமாற்றுவதாக ரவிக்குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனது அண்ணன், சகோதரி, அவர்களது வாரிசுகள் சேர்ந்து தன் தந்தைக்கு பிறகு தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை ஏமாற்றி அபகரித்துள்ளனர். அண்ணன் பன்னீர் செல்வம் உயிரோடு இருக்கும்போதே திருவள்ளூர் மாவட்டம் புட்டலூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் நான் இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் வாங்கி சொத்துக்களுக்கு வாரிசுகள் வேறு யாரும் இல்லை எனக்கூறி அனைத்து சொத்து பத்திரங்களையும் அவர் பெயருக்கு மாற்றியுள்ளார்.
மேலும், ஏப்ரல் மாதம் வரி வசூலிக்க வந்த நகராட்சி ஊழியர்கள் மூலமாகவே நான் இந்த தகவல்களை அறிந்து கொண்டேன். அதற்காக பல நாள் போராடியும் நீதி கிடைத்தபாடில்லை. எனக்கு கிடைக்க வேண்டிய சொத்தை கிடைக்கவிடாமல் போலி இறப்பு சான்றிதழ் வாங்கி என் அண்ணனே என்னை ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்" என்றார்.