சென்னை: ஷெனாய் நகர் கிழக்குப் பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் தர்மன் (68). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவராவார். இவர் ஷெனாய் நகரில் உள்ள கூட்டுறவு வங்கியில் வங்கிக் கணக்கு வைத்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 190 கிராம் மதிப்புகொண்ட நகையை வங்கியில் அடைமானம் வைத்துப் பணம் பெற்றுள்ளார். பின்னர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அடைமானம் வைத்த நகையை மீட்டு தனது வங்கிப் பெட்டகத்திலேயே வைத்துள்ளார்.
அசல் நகை போலி நகையாக மாறல்
இந்நிலையில் தனது வீட்டைப் புதுப்பிக்க பணம் தேவைப்பட்டதால் தர்மன் மீண்டும் தனது வங்கிப் பெட்டகத்தில் இருந்த நகையை எடுத்து, அதே வங்கியில் அடைமானத்திற்கு வைக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நகையைப் பரிசோதித்த மதிப்பீட்டாளர், இது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை எனக் கூறியதால் அதிர்ச்சியடைந்தார்.
அதனைத் தொடர்ந்து தர்மன் தனது தங்க நகையை எடுத்துவிட்டு போலி நகைகளைப் பெட்டகத்தில் மாற்றிவைத்து மோசடி செய்ததாக கூட்டுறவு வங்கியின் முன்னாள் மேலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், அமைந்தகரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டிக் டாக் பிரபலங்களுக்குள் மோதல்: காவல் நிலையத்தில் குவியும் புகார்கள்