சென்னை: அயனாவரம் உதவி ஆணையரிடம் புகார் ஒன்றை இளம்பெண்ணின் தந்தை ஒருவர் அளித்துள்ளார். புகாரில், தனது 22 வயது மகள் முன்னர் தங்கள் வீட்டருகே வசித்து தற்போது பெரவள்ளூருக்குச் சென்றுவிட்ட சதீஷ் (24) என்ற இளைஞரை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இருவரும் நெருங்கிப் பழகியதில் தற்போது தனது மகள் 6 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மகளுக்குத் தெரியாமல் அவளது காதலன் சதீஷ், வேறொரு பெண்ணை கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மகளின் காதலன் சதீஷ் திருமணம் செய்துகொண்டதை தனது மகள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் கண்டு அதிர்ச்சியடைந்து தன்னை அழைத்துக்கொண்டு பெரவள்ளூரில் உள்ள சதீஷ் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டபோது, சதீஷ் தனது மகளை காதலிக்கவே இல்லை எனக்கூறி துரத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் 6 மாத கருவை வயிற்றில் சுமந்துகொண்டு மன உளைச்சலில் இருந்து வந்த தனது மகள் கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி தற்கொலைக்கு முயன்று கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், பின் இச்சம்பவம் தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் நியாயம் வேண்டி புகார் அளித்தபோது புகாரை விசாரிக்காமல் பெரவள்ளூருக்கு மாற்றிவிட்டதாக போலீசார் கூறியதாகவும் புகாரில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணம் ஆன பின்னும் தனது மகளிடம் வீடியோ காலில் தொடர்புகொண்ட காதலன் சதீஷ், ’தனக்கு திருமணம் ஆகிவிட்டது, தன்னால் ஒன்றும் செய்ய முடியாது’ எனக்கூறி தனது மகளை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் தெரிவித்து, தனது மகளை காதலித்து கர்ப்பமாக்கி பின் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்ட மகளின் காதலன் சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகார் மீதான விசாரணை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் போலீசார் இளம் பெண்ணின் காதலனான சதீஷை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 6 வருடங்களாக காதலித்து தன்னை 6 மாதம் கர்ப்பமாக்கிவிட்டு தற்போது தன்னை காதலிக்கவே இல்லை எனக் கூறி நாடகமாடும் காதலன் சதீஷ் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அவனை கைது செய்ய வேண்டும் எனவும், 6 மாத கர்ப்பமாக உள்ள நிலையிலும், நியாயம் கிடைப்பதற்காகவே தொடர்ந்து அலைந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இளம் பெண்ணை தான் காதலிக்கவும் இல்லை, அவரது கர்ப்பத்திற்குத் தான் காரணமும் இல்லை எனவும், ஒரே பகுதியில் வசித்து வந்ததால் நேரில் சில முறை பார்த்து பேசியுள்ளதாகவும், ஆனால் தான் ஏமாற்றிவிட்டதாக நாடகமாடி இளம் பெண் தனது வீட்டிற்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டு, தனது வீட்டார் மற்றும் மனைவியை தரக்குறைவாகப் பேசி தாக்கியுள்ளதாகவும் இளைஞர் சதீஷ் தரப்பில் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் இளம் பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:13 வயது சிறுமி வன்கொடுமை - தாத்தா, சித்தப்பா உள்ளிட்ட 6 பேருக்கு சிறை