சென்னை: அமைந்தகரை பி.பி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சுபாஸ்ரீ (28). திருநங்கையான இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்குச் சேர்ந்தார். தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணிப்புரிந்து வருகிறார்.
திருநங்கை காவலரிடம் தகராறு
இந்நிலையில், நேற்று (ஜூலை 19) சுபாஸ்ரீ உணவு வாங்குவதற்காக அண்ணா ஆர்ச் சாலையிலுள்ள தனியார் விடுதிக்குச் சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த மூவர் சுபாஸ்ரீயிடம் தகாத முறையில் நடந்துகொண்டனர்.
இதனையடுத்து, தான் ஒரு காவலர் என்று சுபாஸ் கூறியும் பொருட்படுத்தாமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த மூவரில் ஒருவர் தானும் அமைந்தகரை காவலர் தான், உன்னால் முடிந்ததை செய்துகொள் எனக்கூறியுள்ளார்.
காவல் துறை விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக சுபாஸ்ரீ அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சுபாஸ்ரீயிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் அமைந்தகரை குற்றப்பிரிவு காவலர் கணேசன் என்பதை கண்டறிந்தனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் இருந்த இருவர் குறித்தும் விசாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபாசக் காணொலிகளை வெளியிடபோவதாக மிரட்டும் காவலர் மீது நடவடிக்கை எடுக்க புகார்