சென்னை: தலைநகரில் உள்ள 32 பணிமனைகளில் 10 பணிமனைகளில் தனியார் உழியர்களை பணி அமர்த்தும் நிகழ்வை கண்டித்து பேருந்து ஊழியர்கள் பேருந்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மாலை வேளையில் பொதுமக்கள் அலுவலகம் சென்று திரும்பும் நிலையில் இந்த போராட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், போக்குவரத்து ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஒப்பந்த ஒட்டுநர்களை நியமிக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை, கும்பகோணம், திருச்சி உட்பட தமிழ்நாட்டில் உள்ள 12 பணிமனைகளில் பல்வேறு வழித்தடத்தில் 400 ஒப்பந்த ஒட்டுநர்கள் நியமிக்க திட்டமிடபட்டிருந்தது. இதில், சென்னையில் மட்டும் அண்ணா நகர், பல்லவன் சாலை, கோயம்பேடு பணிமனைகளில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு பணிமனையிலும் 40 ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமிக்கபட இருந்தது.
இந்த நிலையில், சென்னையில் மாநகர பேருந்துகள் திடீரென நிறத்தம் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக, சைதாப்பேட்டை, கே.கே. நகர், ஆலந்தூர், பூந்தமல்லி, ஆவடி, வடபழனி போன்ற பணிமனைகளில் பேருந்து குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் பணியமர்த்தும் முயற்சியை முற்றிலும் கை விட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து துறை ஊழியர்களிடம் தொமுச (தொழிலாளர் முன்னேற்ற சங்கம்) பேச்சுவார்த்தை நடத்தியது.
இது குறித்து பேசிய தொமுசவின் ஒருங்கிணைப்பாளர் நடராஜன், “போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்களிடம் பேசி வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் முடித்து வரும் போது அனைத்து போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். இதனால் மக்கள் பாதிக்காதவாறு போராட்டத்தை கைவிட வேண்டும் என ஊழியர்களின் கேட்டுக்கொண்டோம். இதனை ஏற்ற ஊழியர்கள் பேருந்துகளை இயக்க தொடங்கியுள்ளனர்” என கூறினார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாரத்தின் முதல் பணி நாளான இன்று ( மே 29 ) வேலைக்குச் சென்று வந்த பணியாளர்கள், குறிப்பாக பெண்கள் பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை வடபழனி, ஆலந்தூர், கிண்டி, நுங்கம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பல இடங்களில் பேருந்துகள் கிடைக்காமல் கூட்டம், கூட்டமாக நிற்கின்றனர். புறநகர் தொடர்வண்டிகளிலும், பெருநகரத் தொடர்வண்டிகளிலும் சமாளிக்க முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. பொதுமக்களின் இந்த அவதி போக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து சென்னை போக்குவரத்து துறை அதிகார்கள், “உங்கள் கவனத்திற்கு... சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகம் மற்றும் பிற அரசு போக்குவரத்துத் துறை பேருந்துகள் தற்போது தற்காலிகமாக இயக்கப்படாததால், பொதுமக்கள் அவரவர் சேருமிடத்திற்குச் செல்ல உதவுமாறும், விதிகளுக்கு உட்பட்டு பயணிகளிடம் கட்டணங்களை வசூலிக்குமாறும் அனைத்து ஆட்டோ, சேர் ஆட்டோ, டாக்ஸி, கேப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்” என குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: குப்பை கிடங்கு எதிர்ப்பு நடைபயணம்: போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு... நடந்தது என்ன?