தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்ததற்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், "சமூக நீதிக்கு எதிரான ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வியைக் கலைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மக்கள் போராடிவரும் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (ஜூன் 5) நீட் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மாற்றுச் சேர்க்கை முறைகள், சட்ட வழிமுறைகள் என அனைத்தையும் ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி பாராட்டி வரவேற்கிறது.
நீட் தேர்வின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நீட் தேர்வு என்பது நவீனக் கால மனுநீதியின் மறுவடிவமே. மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது, மாநில அரசு நடத்தும் தேர்வுகள் தரமற்றவை; மைய பாடத்திட்டம், தேசியத் தேர்வுகள் என்றால் தரமானது எனப் பொய்யைக் கட்டமைத்த ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வைத் தமிழ்நாட்டில் நுழையவிடாமல் தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஒத்துழைப்பு அளிக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’தமிழ் எம்.ஏ மாணவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை’: ரவிக்குமார் எம்.பி. நம்பிக்கை