சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், தற்போது வரை பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எழும்பூரில் உள்ள நரியங்காடு காவலர் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மழை வெள்ளம் அதிகமாக உள்ள இடங்களில் காவலர்கள் பணியில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் மக்களை மீட்பதற்கான பணியைத் தீவிரமாக துவக்கியுள்ளதாகவும், சென்னை முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எளிதாக கண்டறிய ட்ரோன் பயன்படுத்த உள்ளதாக கூறினார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் நிவாரண முகாம் செல்ல விரும்பினால், காவல்துறை அதற்கு தயாராக உள்ளதாகவும், தாழ்வான இடங்களில் மோட்டாரைப் பயன்படுத்தி மழை நீரை வெளியேற்ற உள்ளதாகவும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்காத வகையில் வழி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2345 - 2359, 2345 - 2360, 2345 - 2361, 2345 - 2377 மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை எண் 2345 - 2437 என்ற உதவி எண்களை அழைக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.