கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் பலர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் பூரண குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பி வருகின்றனர். அந்த வகையில், இன்றைய தினம் (செப்.07) சென்னை காவல் துறையைச் சேர்ந்த உதவி ஆணையர், கூடுதல் ஆணையர், காவலர்கள் என 20 பேர் மீண்டும் பணிக்குத் திரும்பினர். அவர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வரவேற்று பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது காவலர்களுக்கு இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், "கரோனா சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய காவலர்களுக்கு வாழ்த்துகள் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும்" என தெரிவித்தார்.
சென்னையில் இதுவரை 2 ஆயிரத்து 308 காவலர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, 1,921 பேர் பூரண குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பி உள்ளனர்.