சென்னை: மத்திய குற்றப்பிரிவில் முக்கியமான மூன்று வழக்குகளை விரைவாக முடித்து அதில் தொடர்புடைய 10 குற்றவாளிகளை கைது செய்து, 120 சவரன் நகைகள், 15 அசையா சொத்துகள், 8 செல்போன்கள், 7 லேப்டாப், 19 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் மற்றும் ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு காவலர்களை, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சங்கர் ஜிவால், “ஆன்லைன் லோன் ஆப் மோசடியில் பாதிக்கப்பட்டோர், புகார் கொடுத்த உடன், அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. இந்த செயலியில் பதிவான 200-க்கும் மேற்பட்ட ஈ-மெயில், வங்கி கணக்குகள், 900-க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் எண்கள் மூலமாக மோசடி நபர்கள் குறித்து தகவல் அறியப்பட்டது. அதன்பின் உத்தரப் பிரதேச மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு சென்று தீபக்குமார் பாண்டே, ஜித்தேந்தர் தன்வர், நிஷா, பிரகாஷ் சர்மா ஆகிய நான்கு பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து, 8 செல்போன்கள், 19 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.
மோசடி நபர்கள் தப்பிப்பதற்காக 3 மாதத்திற்குள் 937 செல்போன் எண்கள் மாற்றியுள்ளனர். 200 யூபிஐ ஐடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகத்தில் 50 பேரை பணியமர்த்தி வொர்க் பிரம் ஹோம் என்ற முறையில் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளன. ஒரு நாளைக்கு இந்த கும்பல் 1 கோடி ரூபாய் வரை பணபரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது.
நாடு முழுவதும் இவர்கள் இது போன்ற மோசடி செய்துவந்தனர். இந்த கும்பல் ஆன்லைன் லோன் ஆப்பை உருவாக்குவதற்கு தனியாக சாப்ட்வேர் குழு ஒன்றை அமைத்து, 50க்கும் மேற்பட்ட லோன் ஆப்புகளை உருவாக்கி, கடன் கேட்கும் பொதுமக்களிடம் 20,000 ரூபாய் கொடுத்து, பின் அவர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட பல ஆவணங்களை வாங்கி மோசடியில் ஈடுபட்டனர்.
சென்னையில் ஆன்லைன் லோன் ஆப் மூலமாக மோசடியில் சிக்கியதாக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாதந்தோறும் 45 ஆயிரம் நபர்கள் ஆன்லைன் லோன் ஆப் மோசடியில் சிக்கி பணத்தை இழப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவரை 37 மோசடி ஆன்லைன் லோன் ஆப்புகளை கூகுளுக்கு பரிந்துரை செய்து முடக்கியுள்ளது. ஆர்பிஐ அனுமதி வழங்கிய லோன் ஆப்பை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.
இதற்கு முன்னதாக லோன் வாங்கி தருவதாக கூறி பத்து வருடங்களில் 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி முத்துகிருஷ்ணா, சங்கர், இசக்கி வேல் ராஜன், சுதா ஆகிய நான்கு பேரை ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு 15 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன.
“சமீபத்தில், சாட் கரோ ஆப் மூலம் பெண் போல் பழகி சாப்ட்வேர் கம்பெனியில் கேண்டீன் நடத்தும் காண்ட்ராக்ட் எடுத்து தருவதாக கூறி 56 லட்சம் மோசடி செய்த வழக்கில், சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்போன் சிக்னலை வைத்து கோவாவில் பதுங்கி இருந்த சக்திவேல் மற்றும் அவரது காதலி பிரியாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் செல்போன் செயலி மூலமாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பேசி பணமோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
“கிப்ட் கூப்பன் ஸ்கேம் மோசடி தொடர்பாக சென்னையில் இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சைபர் புகார்கள் அதிகப்படியாக வரும் வண்ணம் உள்ளது எனத் தெரிவித்தார்.