தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டுவசதித் துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.
அவர் பேசியது பின்வருமாறு:
- சுயநிதித் திட்டத்தின் கீழ் சென்னையில் 92 குடியிருப்பு அலகுகள் ரூ.55.40 கோடி மதிப்பீட்டிலும், நெற்குன்றத்தில் 570 குடியிருப்பு அலகுகள் ரூ.419.56 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படும்
- திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ரூ.15.40 கோடி மதிப்பீட்டில் 286 மனைகளும், வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ரூ.5.56 கோடி மதிப்பீட்டில் 135 மனைகளும், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.19.16 கோடி மதிப்பீட்டில் 277 மனைகளும் மேம்படுத்தப்படும்
- மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள தத்தநேரி, எல்லிஸ் நகர், உச்சப்பட்டி ஆகிய இடங்களில் ரூ.13.44 கோடி மதிப்பீட்டில் 425 மனைகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.117.20 கோடி மதிப்பீட்டில் 2,102 மனைகளும், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ரூ.36.16 கோடி மதிப்பீட்டில் 978 மனைகளும் மேம்படுத்தப்படும்
- சென்னையில் பெசன்ட் நகர், திருவான்மியூர், சி.ஐ.டி, நகர் ஆகிய இடங்களில் ரூ.139 கோடி மதிப்பீட்டிலும், கோயம்புத்தூரில் உள்ள குறிச்சியில் ரூ.13.74 கோடி மதிப்பீட்டிலும் வணிக வளாகம் கட்டப்படும்
- திருச்சி வராகநேரியில் சுயநிதித் திட்டத்தின் கீழ் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் 180 குடியிருப்புகள் கட்டப்படும்
- தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் பயனாளிகள் தாமாக வீடுகள் கட்டும் திட்டப் பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்
- தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023இன் படி, குடிசைப் பகுதிகளற்ற நகரங்கள் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீட்டுவசதித் திட்டத்தின் நிதி ஆதாரத்தைப் பயன்படுத்தி சென்னை மற்றும் இதர நகரங்களில் 10,758 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.1131.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்
- சென்னை திருமங்கலம் பகுதியில் 0.40 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50,000 சதுர அடி கொண்ட வணிக வளாகம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்படும்
- 2020-2021ஆம் ஆண்டில் தொடக்கக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் ரூ.150 கோடி கடன் வழங்கப்படும்
- தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் பொருட்டு இரண்டு மண்டல அலுவலகங்கள் மதுரை மற்றும் கோயம்புத்தூரில் தொடங்கப்படும்
- சென்னை குன்றத்தூரில் 52 ஏக்கர் பரப்பளவிலும், பூவிருந்தவல்லியில் 8 ஏக்கர் பரப்பளவிலும், பெருங்களத்தூரில் 28.20 ஏக்கர் பரப்பளவிலும் மனைப்பிரிவுத் திட்டம் ஏற்படுத்தப்படும்
- நகர் ஊரமைப்புத் துறையால் ரூ.4 கோடி மதிப்பீட்டில் 75 முழுமைத் திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும்
- திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி ஆகிய தனித்த உள்ளூர் திட்டப் பகுதிகள், கூட்டு உள்ளூர் திட்டப் பகுதிகளாக மாற்றப்படும்
- சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் கோயம்பேடு மொத்த அங்காடி வளாகத்திற்குள் 20,000 சதுர அடி பரப்பளவு கொண்ட காலியிடத்தில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய வசதி கொண்ட பன்மட்ட வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்படும்
- வெளிவட்ட சாலையின் திறனை முழு அளவில் பயன்படுத்த ஏதுவாக வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள 50மீ அகல விரிவு நிலப் பகுதி மேம்படுத்தப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: 6 புதிய தொழிற்பூங்காக்களில் 2,934 கோடி ரூபாய் செலவில் நவீன உள்கட்டமைப்பு!