சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தாம்பரம் மது விலக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சேலையூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தனியார் பல்கலைகழக மாணவர்களின் அறையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த அறையில் 4 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு தங்கிருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான நிகில் (18), ஜஸ்வந்த் (19), அல்லா ராமசந்திரன் (19), அல்லா யஷ்வந்த் குமார் (20) ஆகிய நான்கு கல்லூரி மாணவர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து சேலையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது ஆந்திராவில் இருந்து சிலர் கஞ்சாவை கொண்டு வந்து விற்பனை செய்வதாகவும் அதனை வாங்கி கல்லூரியில் பயிலும் சக மாணவர்களுக்கு விற்பனை செய்துவந்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.
தொடர்ந்து நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தாம்பரம் காவல் ஆனையர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:ஆடும் பொம்மைகளுக்கு வெற்று வசனங்கள் எதற்கு? எடப்பாடிக்கு ஆர்எஸ் பாரதி பதிலடி