சென்னை: கோயம்பேடு ஜெய் நகர் பார்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை ஒரு வாலிபர் திருடியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்ப முயன்ற அந்நபரை பார்த்த பொதுமக்கள், அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், அவரை கோயம்பேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏழ்மையால் சொகுசுக்கு ஏங்கிய நேரம்: பிடிபட்ட நபர், சென்னை புழல் காவாங்கரை பன்னீர் செல்வம் பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (எ) டேனியல் (20). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த டேனியல், மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
அப்போது டேனியலின் நண்பர் ஒருவர் செயின், செல்போன் மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டு அதன் மூலம் ஐபோன், விதவிதமான ஆடைகள், விலையுயர்ந்த பைக் என சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் தானும் இதுபோன்று சொகுசாக வாழ வேண்டும் என்று டேனியல் எண்ணியுள்ளார்.
இதற்கு அந்த நண்பரும் ஒத்துழைத்துள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து செயின் பறிப்பு, பைக் திருட்டு மற்றும் செல்போன் பறிமுதல் போன்ற திருட்டு செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்குகளின் பின்னால் டேனியல்? மேலும் இதில் வரும் பணத்தில் விலையுயர்ந்த ஆடை, போதை, ஆடம்பர செல்போன் என டேனியல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். அதேநேரம் திருட்டு சம்பவத்தில் அதிகப்படியான பணம் கிடைத்ததால், 2019ஆம் ஆண்டு டேனியல் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முழு நேர திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
அந்த நேரத்தில்தான் தற்போது கோயம்பேட்டில் பைக் திருடும்போது பொதுமக்களிடம் சிக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து டேனியலை காவல் துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேநேரம் கைது செய்யப்பட்ட டேனியல் மீது ஏற்கனவே மாதவரம், புழல், செங்குன்றம், திருமங்கலம் மற்றும் கோயம்பேடு ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி, செல்போன் பறிப்பு மற்றும் பைக் திருட்டு என சுமார் ஆறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து டேனியலிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் டேனியலை திருட்டு தொழிலில் ஈடுபடுத்திய அவரது கல்லூரி நண்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: OTP இல்லாமல் மிஸ்டு கால் மூலம் ரூ.50 லட்சம் திருட்டு.. பொதுமக்கள் உஷார்!