சென்னையில் தனது கணவர் 2009ஆம் ஆண்டு இறந்துவிட்டநிலையில் 43 வயதான பெண், தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி இரவு, அப்பெண் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரின் வீட்டு அருகில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். அவரை அப்பெண் ’நீங்கள் யார்? இங்கு ஏன் நின்று கொண்டு இருக்கிறீர்கள்?’ எனக் கேட்டுள்ளார்.
அப்போது அந்த நபர் அத்துமீறி அப்பெண்ணின் வீட்டிற்குள் சென்று, அவரின் வாயைப் பொத்தி தலைமுடியை பிடித்து இழுத்து, ’கத்தினால் கழுத்தை அறுத்து விடுவேன்' எனக் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
இதையடுத்து கத்தியை காட்டி, மிரட்டி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, நிர்வாணமாக புகைப்படத்தை தொலைபேசியில் எடுத்துக்கொண்டு, அப்பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அந்த நபர் அங்கிருந்து சென்று உள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து சென்ற நபர், பெண்ணின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டு, ’இதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது. காவல்துறையில் புகார் அளித்தால் கொன்றுவிடுவேன். தான் மீண்டும் அழைக்கும்போது என்னுடன் வரவேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தரமணி உதவி ஆணையாளரின் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த அடையாளம் தெரியாத நபரை சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும்போது, கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் சென்னை திருவல்லிக்கேணி பைண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஷால்(20) எனத் தெரியவந்தது. இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : கொள்ளையடிக்க சென்ற வீட்டில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்!