காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே அமைந்துள்ளது தாகூர் பல் மருத்துவக் கல்லூரி. இக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த இளம்பெண், சக பணியாளர்கள் தனக்கு பாலியல் தொல்லை தந்து தற்கொலைக்கு தூண்டுவதாக முகநூலில் பதிவிட்டார். இந்த வீடியோ சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கல்லூரி பொது மேலாளர், துணை முதல்வர் உள்ளிட்ட ஐந்து நபர்கள் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர். அறையில் பூட்டிவைத்து கடந்த இரண்டு வாரங்களாக தனக்கு உணவும், தண்ணீரும் தரவில்லை. இதனால் உடலளவில் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று பேசியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட உதவிப் பேராசிரியை, தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் லட்சுமிகாந்தன், கல்லூரி பொதுமேலாளர் சசிகுமார், செந்தில்குமார், துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன், துப்புரவு பணியாளர் முனியம்மாள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.