சென்னை: ஈ.வே.ரா பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, 1949-இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி, குறுகிய காலத்திலேயே அண்ணாதுரை தன்னுடைய ஆழமான கருத்துக்களினாலும், பேச்சாற்றலினாலும், தனித்துவமான சிந்தனைகளையும் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தில் ஒரு பேரியக்கமாக உருவாக்கியவர்.
தமிழ்நாட்டில் இன்றைய தலைமுறையினர் அவரை பார்க்காவிட்டாலும், தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் நீங்காமல் இருக்கும் பெயர் சி.என்.அண்ணாதுரை.
வரலாறு: காஞ்சிபுரத்தில் நடராசன் மற்றும் பங்காரு தம்பதியர்களுக்கு மகனாக செப்டம்பர்-15ஆம் தேதி 1909 அன்று பிறந்தவர்தான் சி.என்.அண்ணாதுரை. தன்னுடைய கல்லூரிப் படிப்பை 1928இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்னர் 1930-இல் ராணி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.
தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் தொடக்கமாக 1935ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டார். அதைத் தொடர்ந்து நீதிக்கட்சியோடு பயணிக்க ஆரம்பித்த அண்ணா, அதன் பின் ஈ.வே.ரா பெரியார் உடன் இணைந்து திராவிடர் கழகத்துடன் பயணித்தார்.
சில அரசியல் முரன்பாடுகள் காரணமாக, செப்-17, 1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துவதாக அறிவித்து, அதன் முதல் பொதுக்கூட்டத்தை சென்னையில் தொடங்கி தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை தலைமையேற்று நடத்தத் தொடங்கினார். பின்பு, சுதந்திர இந்தியாவின் மாநிலக் கட்சியின் ’முதல் முதலமைச்சர்’ என்ற பெருமையும் இவரேயே சாரும். தமிழகத்தின் பல்வேறு கட்சிகளின் கொள்கையின் நாயகனும் இவர்தான்.
உரிமைக்கான போராட்டம்: தமிழ்நாட்டில் தற்போது இந்திக்கு ஏதிரான குரல்கள் எழுகின்றது என்றால், இதற்கு விதை வித்திட்டவர் அண்ணாதான். 1935ஆம் ஆண்டு தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக புகுத்தப்பட்டது. பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை இந்தி கற்பது கட்டாயம் என்று ஆக்கினார் ராஜாஜி.
இதை எதிர்த்து ஈவேரா பெரியார் போராட்டம் அறிவித்தார். சுதந்திர இந்தியாவின் முதல் மாபெரும் போரட்டமாக இருந்தது இந்த போரட்டம். இதற்காக பெரியார், அண்ணா ஆகியோர் 1938ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அண்ணாவுக்கு 4 மாத சிறைவாசம் விதிக்கப்பட்டது. பெரியாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைத்தது.
இதன் பிறகு 1940ஆம் ஆண்டு இந்தியை கட்டாயப் பாடமாக்கிய அரசாணை திரும்பப் பெறப்பட்டது. 1938ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணா ஆற்றிய எழுச்சி உரை இன்று வரை பேசப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
தமிழகத்தை மாற்றிய 3 திட்டங்கள்: 1967இல் ஆட்சியைக் கைப்பற்றியது திமுக. அண்ணா முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது அவர் கொண்டு வந்த " சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது, இந்தி மொழியற்ற இருமொழிக் கொள்கை, புரோகிதரற்ற சுயமரியாதைத் திருமணம்" என 3 திட்டங்கள் மூலம் தமிழகத்திற்கென தனித்துவமான அடையாளத்தைத் தந்தவர், அண்ணா.
தமிழும் அண்ணாவும்: இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் மீது அண்ணா செலுத்திய ஆதிக்கமும், தாக்கமும் என்பது அளப்பரியது. தமிழில் ஏராளமான சமஸ்கிருத வார்த்தைகள் கலந்து பரவலாக இருந்த நேரத்தில், அவைகளுக்கு தமிழ் வார்த்தையைக் கண்டறிந்து அவைகளை மேடை பேச்சின் மூலமாக மக்களிடையே பேச்சு வழக்கு வார்த்தையாக மாற்றிய பெருமையும் அண்ணாவிற்கு உண்டு. குறிப்பாக சட்ட சபை-சட்ட பேரவை ஆனது, மந்திரி- அமைச்சர், காரியக் கமிட்டி - செயற்குழு என பல வார்த்தைகளை மாற்றி பேச்சுமொழி புரட்சி செய்தவர் அண்ணா.
அண்ணாவின் இறுதிக்காலம்: மக்களின் பேராதரவோடு அண்ணா ஆட்சி அமைத்திருந்தாலும், இரண்டு ஆண்டுகள் மட்டும்தான் அவரால் ஆட்சியில் இருக்க முடிந்தது. பிப்ரவரி 3, 1969-இல் புற்றுநோய் காரணமாக அவர் காலமானார். ஒரு தனி மனிதனின் இறுதி ஊர்வலம் கின்னஸ் புத்தகம் வரை இடம் பெற முடியுமா என்றால் முடியும்.
இறந்தும் சாதனை படைத்தவர்தான் அண்ணா. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை கோடியைத் தாண்டியதாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோடி, அமித்ஷாவைப் பற்றித்தான் பெரியார் அதிகம் கவலைப்பட்டார் - திருமாவளவன்..!