சென்னையில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் செயல்பட்டு வந்த மெட்ரோ ரயில் நேரத்தை, இன்று முதல் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று முதல் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில் நேரம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, முதல் ரயில் விமான நிலையம், வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை மற்றும் சென்ட்ரல் ஆகிய நிலையங்களில் இருந்து கிளம்பும்.
இதேபோல், கூட்ட நெரிசல் நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் என இயக்கப்படும். இதேபோன்று, கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும். இந்த நேர நீட்டிப்பு என்பது திங்கள் முதல் சனிக்கிழமை வரையில் வரையில் மட்டுமே இருக்கும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.58 மணி முதல் இரவு 10.01 மணி வரையில் ரயில் சேவை செயல்படும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.