சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்விதமாக மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் அருகேயுள்ள விம்கோ நகர்வரை விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் 8 ரயில் நிலையங்களுடன் இந்தப் பாதை அமைகிறது. இதில், ஆறு ரயில் நிலையங்கள் உயர்மட்டப் பாலங்கள் வழியாகவும், இரண்டு ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதை அமைத்தும் இயக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் இந்தப் பாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்தப் பாதையில் அடுத்த வாரத்தில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக மெட்ரோ ரயில் அலுவலர்கள் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
மின் வழித்தடங்கள், சிக்னல்கள் ஆகியவை முறையாகப் பணியாற்றுகிறதா எனப் பரிசோதிக்க இந்தச் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. அதில், ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அவை முறையாகச் சீரமைக்கப்படும். அதேபோல் தொலைத்தொடர்பு சாதனங்கள் பணியாற்றுவது உள்ளிட்டவையும் சோதனை செய்யப்படவுள்ளது.
இந்த வழித்தடத்தை முழுக்க முழுக்க பசுமை வழித்தடமாக மாற்றும் வகையில் மெட்ரோ ரயில் மேம்பாலத்துக்கு கீழே சாலைகளில் உள்ள தடுப்புகளில் பல வகையான செடிகள் வளர்க்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காகத் தோட்டக்கலை வல்லுநர்களின் ஆலோசனையைக் கேட்டு அதற்கேற்ப வளர்க்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மெட்ரோ ரயில் திறப்புக்கு முன்பாக ரயில் நிலைய கட்டுமான பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கைலாசாவுக்கு 3 நாட்கள் இலவச விசா - நித்யானந்தாவின் அதிரடி அறிவிப்பு