சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து அச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் அச்சந்தை திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருமழிசைக்கு மாற்றப்பட்டது. அங்கு மொத்த காய்கறி வியாபாரிகளுக்கு மட்டுமே கடைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டது.
ஆனால், சிறு வியாபாரிகளுக்கான கடைகள் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், பொதுமக்கள் நலன் கருதியும், சிறு வியாரிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கிலும் சென்னையில் அண்ணாநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என சிறு வியாபாரிகள் சார்பாக சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் கார்த்திகேயனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை கடைகள் நடத்த சி.எம்.டி.ஏ. நிர்வாகம் இடம் ஒதுக்கித் தரவில்லை.
இந்நிலையில் இதுதொடர்பாகப் பேசிய சிறு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ”அரசுக்கு முழு ஒத்துழைப்பை நாங்கள் ஆரம்பம் முதலே கொடுத்து வந்தோம். கிட்டத்தட்ட 2,000 கடைகள் கொண்ட எங்களின் சிறு வியாபாரிகள் சங்கத்திற்கு கடைகள் நடத்த தற்போது இடம் ஒதுக்கித் தராமல் சி.எம்.டி.ஏ. அலுவலர்கள் அலைக்கழிக்கிறார்கள். எனவே நாங்கள் இறுதியாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம்” என்கின்றனர்.