சென்னை: சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15-18 வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை ஸ்டாலின் இன்று (ஜனவரி 3) தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் 33 லட்சத்து 20 ஆயிரம் சிறார்கள் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்குத் தடுப்பூசி போட ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பள்ளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்று உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தடுப்பூசி போட ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
சிறார்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வர்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இந்தத் திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டுவருகிறது. மாணவர்கள் பொதுத்தேர்வை அச்சமின்றி எழுதுவார்கள்" எனத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மா. சுப்பிரமணியன், "பள்ளி மாணவர்கள் பயனடையும்விதமாக இன்று 15-18 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்தியாவில் 15-18 வயதுடையவர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அறிவித்திருந்தது.
முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்றி தொடர்ந்து செலுத்திவருகிறோம். கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி, முன்களப் பணியாளர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது.
90% பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி 89.60 விழுக்காடு, இரண்டாம் தவணை தடுப்பூசி 60.71 விழுக்காட்டினர் போட்டுக் கொண்டுள்ளனர். 33 லட்சத்து 44 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியில் நான்கு லட்சம் மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
அதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 44 விழுக்காட்டினரும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 12 விழுக்காட்டினரும் உள்ளனர்.
அரசின் அறிவுறுத்தல்படி இன்று காலைவரை பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தியது 53 விழுக்காடாக அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்தார்
பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய ஸ்டாலின், "கரோனா இரண்டாவது அலையை அரசு திறம்படச் செயல்பட்டு தீவிரத்தை கட்டுப்படுத்தியது.
மாநிலத்தின் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு சரியான பாதைக்கு வந்துள்ளது. ஆனால் ஒமைக்ரான் பாதிப்பால் மீண்டும் தொழில் துறை பாதிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முகக்கவசம் - கேடயம்
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் சென்னையில் 47 விழுக்காட்டினர் உள்ளனர். இது மக்களை பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை. உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன். உருமாறிய கரோனா தொற்று ஒமைக்ரான் முந்தைய வைரஸ் டெல்டாவைவிட பாதிப்பு குறைவு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கரோனாவைவிட ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருக்கும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நோயின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிரிக்கக்கூடும். இதனைத் தடுத்து, நமக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய கேடயமாக இருப்பது முகக்கவசம்தான்.
மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடத்தில் தனிநபர் இடைவெளி கடைப்பிடித்து, முகக்கவசம் அணிய வேண்டும்.
உங்கள் வீட்டில் ஒருவராக...
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் கரோனா பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என மருத்துவர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவரும் இந்த நேரத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 60 வயதைக் கடந்தவர்கள் இன்னும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதை உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றைத் தடுக்க அரசு மட்டும் முயற்சி செய்தால் ஒழிக்க முடியாது, மக்களும் அரசுடன் இணைந்து செயல்பட்டால் தான் ஒழிக்க முடியும்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: மீண்டும் புத்துயிர் பெற்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருச்சி மலைக்கோட்டை!