சென்னை: திமுக ஆட்சியில் பல்வேறு காலகட்டங்களில் நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும், திமுகவின் நீண்டகாலப் பொதுச்செயலாளராக 1977 முதல் 2020 வரை இருந்தவருமான பேராசிரியர் க.அன்பழகன், வயது மூப்புக் காரணமாக கடந்த ஆண்டு 07.03.2020அன்று காலமானார்.
இந்நிலையில், 2021 சட்டபேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, சென்னை நந்தனத்தில் உள்ள நிதித்துறையின் கட்டடத்திற்கு முன்னாள் நிதி அமைச்சர் கே.அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
சிலை திறப்பு
அந்த அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக, பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாளான இன்று (டிச.19) சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு "பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை" எனப் பெயர்சூட்டி, அங்கு நிறுவப்பட்டுள்ள அவரது சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், நாட்டுடமையாக்கப்பட்ட அன்பழகனின் நூல்களுக்கு அரசின் நூல் உரிமைத் தொகையை அவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப்பின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: பாஜக - எஸ்டிபிஐ மோதல்: 12 மணிநேரத்தில் 2 கொலை; கேரளாவில் பதற்றம்