சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக பல மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் கல்வி கற்பிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைப் போக்குவதற்கு பட்ஜெட்டிலிருந்து 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
12 மாவட்டங்களில் தொடக்கம்
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுகல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் முதல் கட்டமாக மாணவர்களின் வீட்டிருகே சென்று தன்னார்வலர்கள் பாடம் நடத்த உள்ளனர். அக்டோபர் 18 ஆம் தேதி இந்த திட்டத்திற்கான விழிப்புணர்வு கலைப் பயண வாகனம், தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வருகிற 27 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து ஆறு மாத காலம் தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த உள்ளனர்.
இதையும் படிங்க: 'ஆட்சி, கட்சியில் அளப்பறிய பங்களிப்பு- 57இல் அமித் ஷா.. பிரதமர் வாழ்த்து!