சென்னை: தேனாம்பேட்டை விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 4) ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்கிடும் வகையில், சட்டப்பேரவையில் விதி 110ன்படி 708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நகர்ப்புறங்களில் சுகாதாரத்திற்கான நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழுமத்தின் மூலம் கட்டப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
தமிழ்நாட்டில், 2021-2022ம் ஆண்டில் 593 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், 2022-23 ஆண்டில் 115 மையங்கள் என மொத்தம் 708 மையங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டு கட்டிட வசதி, மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் 140, கோயம்புத்தூர் மாநகராட்சியில் 50, மதுரையில் 46, திருச்சி - 25, சேலம் - 25, திருப்பூர் - 25 மற்றும் நகராட்சி பகுதிகளில் 189 என மொத்தம் 500 மையங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 6ம் தேதி மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார்.
முதற்கட்டமாக, செயல்படுத்தப்படும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் துணை பணியாளர் வீதம் ஒவ்வொரு நகர்ப்புற நல்வாழ்வு மையத்திலும் பணிபுரிய மாவட்ட சுகாதார சங்கங்களின் மூலம் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் செயல்படும். இந்த நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் கர்ப்பிணிகள் பராமரிப்பு, குழந்தைகளுக்கான நோய் தடுப்பூசி மருந்துகள் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்படும் எளிய வகை தொற்று நோய்களான சளி மற்றும் இருமல் உட்பட பேறுசார் மற்றும் மகப்பேறு பச்சிளங்குழந்தை, பச்சிளம் குழந்தை பராமரிப்பு சேவைகள், குழந்தை நலம் மற்றும் வளரிளம் பருவத்தினர் நலம், குடும்பக்கட்டுப்பாடு, கருத்தடை மற்றும் இனப்பெருக்க குழந்தை நலச் சேவைகள் (Reproductive Child Health), தொற்று நோய்த்தடுப்பு, புறநோயாளிகளுக்கான எளிய மற்றும் சிறிய நோய்களுக்கான தடுப்பு, தொற்றாநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, மனநலம் பாதிப்பு கண்டறிதல் மற்றும் சிகிச்சை, கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பராமரிப்பு, பல் பராமரிப்பு, முதியோர்களுக்கான நோய்த்தடுப்பு சுகாதார சேவைகள், அவசர முதலுதவி சிகிச்சை விபத்து மற்றும் அவசரகால சேவை உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது.
அத்தியாவசிய மருத்துவ சேவைகள் சார்ந்த 63 வகையான பரிசோதனைகள் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் மேற்கொள்ளப்படும். இந்த மையங்களில் விரிவாக்கப்பட்ட மருத்துவ சேவைகளான வாய், காது, மூக்கு, தொண்டை, கண், முதியோர் நலம், மனநலம் மற்றும் சிறுகாய சிகிச்சைகள் ஆகியவை வழங்கப்படும். தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கான உரிய மருந்துகளுடன் இணைந்து 171 வகையான மருந்துகள் வழங்கப்படுகின்றன.
நகர்ப்புற நல்வாழ்வு மையம் சார்ந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சுகாதாரக் குழுவினருடன் இணைந்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், மையம் சார்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் சுகாதார கல்வி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் 14 வகையான ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ள தேவையான 32 வகையான மருத்துவக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், நோயாளிகள் மருத்துவர்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டும் சிகிச்சை பெறலாம். மேலும், இ-சஞ்சீவினி இணைய முகப்பின் மூலமாக மருத்துவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் நோயாளிகளின் மேல்சிகிச்சைக்காக மற்றொரு முதுநிலை மருத்துவரின் ஆலோசனையை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அனைத்து நல்வாழ்வு மையங்களிலும் செயல்படுத்தப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையின் அடையாளங்கள் சீர்வரிசை.. களைகட்டிய காதணி விழா!