சென்னை : ரஷ்யா உக்ரைன் தாக்குதலில் கர்நாடக மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மறைவிற்கு வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் இன்று (மார்ச் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிளஸ் 2 தேர்வில் 97 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக் கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டிற்குச் சென்று படித்த கர்நாடக மாநிலத்து மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கின்றது.
உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமலும் - தங்களது மருத்துவக் கனவு என்ன ஆகுமோ என்ற கவலையிலும், பெரும் இன்னல்களை சந்தித்து வரும் மாணவர்கள் குறித்து ஒன்றிய அரசு தெரிவித்து வரும் கருத்துகள் - ஒன்றிய அமைச்சர்களின் பேட்டிகள் - ஒன்றிய அரசுக்கு ஆதரவளிக்கிறோம் என சமூக வலைதளங்களில் போடப்படும் பதிவுகள் எல்லாம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
மாணவர்களை காப்பாற்ற வேண்டிய தருணம்
இந்தப் போக்கினை உடனடியாகக் கைவிட்டு, உக்ரைன் - ரஷ்யப் போரால் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி, நாள்தோறும் உயிர் பயத்தில் தவித்து வரும் ஒவ்வொரு மாணவரையும் காப்பாற்ற வேண்டிய, கடமையை முனைப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்ற மனநிலைக்கு ஒன்றிய அரசு வர வேண்டும்.
இது 'பரப்புரை' செய்வதற்கோ, 'விளம்பரப்படுத்திற்கோ' உகந்த நேரம் அல்ல. உயிருக்கும் தங்களது எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களை காப்பாற்ற வேண்டிய தருணம் இது. அவர்களுக்கு நம்பிக்கை அளித்து அழைத்து வர வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் என்பதை நினைவூட்டுகிறேன்.
பிரதமரின் மிக முக்கியக் கடமை
அதைவிடுத்து, இங்கு படிக்க முடியாமல் - வெளிநாடு சென்று படிக்க முற்பட்ட மாணவர்களின் ஆர்வத்தையும், அதற்காக கஷ்டப்பட்டு தங்களது சொத்துகளையும் விற்று - சொந்த சேமிப்புகளை கரைத்து மேல்படிப்பிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்களின் உணர்வையும் கொச்சைப்படுத்தும் வகையிலான ஏட்டிக்குப் போட்டியான பேட்டிகளையும், கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என ஒன்றிய அமைச்சர்களுக்கும், பாஜகவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் இருப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டியது அனைவருக்குமான பிரதமரின் மிக முக்கியக் கடமையாகும்.
நீட் நுழைவுத் தேர்வால் - மருத்துவக் கல்வி ஏழை எளியவர்களுக்கு - நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எட்டாக் கனியாக ஆகிவிடும் ஆபத்தை போக்கவே, அந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளும் ஒருமுகமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது அண்டை மாநிலமான கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி அவர்களும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.
நீட் தேர்வு பாதிப்பு
இன்னும் சில மாநிலங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள அனைத்து மாணவர்களுக்காகவுமே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறோம். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இதற்கான ஆதரவை கோரி மாநில முதலமைச்சர்களுக்கும் 'நீட் தேர்வு பாதிப்பு' தொடர்பான அறிக்கையை அனுப்பி ஆதரவுக் கோரினேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலில் நிறைவேற்றப்பட்ட மசோதாவும், இப்போது மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ள 'நீட் விலக்கு' மசோதாவும் இந்த அடிப்படை நோக்கத்தை முன்வைத்தே என்பதை உக்ரைன் போரில் மருத்துவம் படிக்கச் சென்று உயிரழந்த மாணவர்களின் அவல நிலைமை, துயர நிலைமை மீண்டும் உணர்த்துகிறது.
இணைந்து போராடி வெல்வோம்
நீட் தேர்வை அறவே அகற்றி பள்ளிக்கல்வி மதிப்பெண்கள் மூலமாக மட்டுமே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து போராடி வருகின்ற சூழ்நிலையில் தற்போது வந்துள்ள உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
'உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள்' என்று கேள்வி கேட்டு தர்க்கம் செய்வதற்கு ஏற்ற நேரமல்ல இது. உக்ரைன் மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதும், உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் 'நீட் தேர்வை' ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும். அந்த இலக்கு வெகு தொலைவில் இல்லை. அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணம்!