சென்னை: தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு குறித்த பரப்புரைப் பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கிய இந்தப் பரப்புரை 25ஆம் தேதி சென்னையில் நிறைவடைந்தது.
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி மேற்கொண்ட 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண நிறைவு விழா பெரியார் திடலில் நேற்று (ஏப்ரல் - 25ஆம் தேதி) நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பெரியார் திடலுக்கு நான் வந்திருப்பது எனக்கு புதிதல்ல, நான் என் தாய் வீட்டிற்கு வந்து உள்ளேன்.
நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் ஆசிரியர் கி.வீரமணி பரப்புரையைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார். தந்தை பெரியார் 90 வயதிற்கு பிறகு தான் அதிகமான மேடை பேச்சுக்களில் பேசி இருக்கிறார். அதே போலத்தான் ஆசிரியர். 89 வயதிலும் அதிகமான மேடைகளில் பேசி வருகிறார்.
எந்த சூழ்நிலையிலும் நான் திராவிட மாடல் ஆட்சியை வழி நடத்திச் செல்வேன்.
இந்த திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்குகிறது. கருப்பையும், சிவப்பையும் யாராலும், எந்த காரணத்தாலும் பிரிக்க முடியாது. தமிழினம் முன்னேறுவது சிலருக்குப் பிடிக்கவில்லை, அதனால் தான் நம்மை எதிர்க்கிறார்கள். பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு இதனால் தான் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.
நீட் மட்டுமல்ல, எந்த நுழைவுத் தேர்வையும் நுழையக்கூடாது என்று சொல்பவர்கள் நம். சுய நலத்திற்காகத் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தவர்கள், இந்த இரட்டையர்கள் ( பன்னீர் செல்வம், எடப்பாடி). ஆளுநர் வேலை என்பது மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது அல்ல, குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்பும் தபால்காரர் வேலை தான்.
நாங்கள் கேட்பது நீட் சட்ட முன்வடிவுக்கான ஒப்புதல் அல்ல, குடியரசு தலைவருக்கு அனுப்பத்தான் சொல்கிறோம். அஞ்சல்துறை ஊழியரின் பணியைக் கூட செய்யாமல் இருப்பது ஆளுநருக்கு அழகல்ல. மக்களை விட ஆளுநர் அதிகாரம் மிக்கவர் என்ற எண்ணம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: சமஸ்கிருதம் நீட் தேர்வாக உருமாறி வந்திருக்கிறது - கி.வீரமணி