சென்னை: சட்டப்பேரவையில் இன்று (ஏப். 26) மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சி.வி.கணேசன் பதிலுரை மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
இதனிடையே, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அப்போது , "தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி வீசினாலும் கட்டுமரமாக தான் இருப்பேன். அதில் நீங்கள் பயணம் செய்யலாம், கவிழ்ந்துவிட மாட்டேன்.
சொன்னதுபடியே வாழ்ந்து காட்டியவர்: தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை நெருப்பில் தூக்கி போட்டாலும் விறகாக தான் வீழ்வேன். அடுப்பு எரித்து நீங்கள் சாப்பிடலாம் என்ற வைர வரிகளுக்கு சொந்தகாரர் மட்டுமல்லாது சொன்னதுபடியே வாழ்ந்து காட்டியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால் அது கருணாநிதி மட்டும்தான். ஐந்து முறை முதலமைச்சராக இருந்து 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து 60 ஆண்டுகள் மாமன்றத்தில் இருந்தவர் கருணாநிதி. ஐந்து முறை முதலமைச்சராக இருந்த இருந்த காலத்தில் கருணாநிதி உருவாக்கியது தான் இன்று நாம் காணும் நவீன தமிழ்நாடு.
தமிழ்நாட்டின் அடையாளங்களை உருவாக்கியவர் கருணாநிதி. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத், பாரதிதாசன், எம்ஜிஆர், கண்ணதாசன், கிருபானந்த வாரியர், குன்றக்குடி அடிகள் போன்ற தலைவர்களுடன் தலைவராக வாழ்ந்தவர் கருணாநிதி. எல்லைகளைத் தாண்டி எல்லோரையும் வசப்படுத்தியவர் கருணாநிதி.
கருணாநிதி பிறந்த ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். வரும் ஜூன் 3ம் தேதி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவச்சிலை திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எனக்கு எல்லாமுமே கருணாநிதிதான் - கண்கலங்கிய துரைமுருகன்