சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென்மண்டல இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் தக்ஷின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதில், "Regional is the new National" என்ற இந்திய தொழிற்கூட்டமைப்பின் தென் மண்டல அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன் பின் மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், "அடுத்த மாதம் 7ஆம் தேதி வந்தால் பதவியேற்று 1 ஆண்டு ஆகவுள்ளது. தொழில் முதலீடுகளை ஈட்டுவதற்கு வெளிநாடு சென்று வந்துள்ளேன். ஒரு காலத்தில் திரைப்படத் தயாரிப்பில் இருந்தவன் நான். சில திரைப்படங்கள் மற்றும் நாடகங்களிலும் பங்கேற்றுள்ளேன்.
அதனால் எனக்கு இங்கு வர மிகவும் பிடித்திருக்கிறது. நான் உங்களுக்காக உங்களில் ஒருவனாக இருப்பேன். 2 ஆண்டுகள் கரோனா தொற்றால் பலபேர் வாழ்வு இழந்துள்ளனர். அதிலும் திரையுலகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இந்த மாநாட்டை நடத்துவதற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரைத்துறையில் முதலில் சாதனைப் படைத்தது, தமிழ்நாடுதான். அதிலும் சென்னை முக்கியப்பங்கு வகிக்கிறது. தென்னிந்தியத் திரைத்துறைக்கும் முக்கியப்பங்கு உண்டு. கதை, வசனம், தொழில்நுட்பம் ஆகியவற்றை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும். திரைத்துறைக்குத் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும்.
மேலும், திரைத்துறைக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். புகையிலை விழிப்புணர்வு கொடுத்து இளைஞர்களை நல்வழிப்படுத்துவது நமது கடமை. சமூகத்திற்குத் தேவையான முற்போக்கான திரைப்படங்களை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்" என்று தெரிவித்தார். இந்த மாநாட்டில் திரைப்பட இயக்குநர்கள் மணிரத்தினம், ராஜமெளலி, நடிகர்கள் ஜெயராம், ஜெயம்ரவி, ரமேஷ் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.